Skip to main content

2012 - தான் உலகத்தின் இறுதி வருடமா ?



    திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் வாயுலிங்கத்திற்கு எதிர்புறமாக அமைந்துள்ள அய்யனார் கோவிலில் உட்கார்ந்து இளைப்பாற  ஏகாந்தமாக மலையின் அழகை அருகிலிருந்து பார்த்து ரசிக்க நல்ல இடம்.  அந்த இடத்தில் ஒரு நாள் கல் படுக்கையின் மேல் உட்கார்ந்து இருந்தேன்.  தூய வெள்ளை ஆடையும், கழுத்தில்  காவி நிற துண்டும் போட்ட ஒரு இளைஞர் ஒரு சின்ன துண்டு பிரசுரத்தை நீட்டினார்.  வாங்கி படித்து பார்த்தேன.  2012-ல் உலகம் அழியும் என்று கொட்ட எழுத்தில் எழுதப்பட்டிருந்த வரி கண்வழியாக புகுந்து மனதை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டியது. 

     மேலும் அந்த துண்டு பிரசுரத்தில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி நடுப்பகல் 12-மணி, 12- நிமிடத்திற்கு உலகத்தில் பெரும்பகுதி அழிந்துவிடும் என்றும் அந்த பிரசுரத்தை வெளியிட்ட நிறுவனத்தில் சேர்ந்து நல்ல ஆத்மாவாக மாறிவிட்டால் உலக அழிவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

    இந்த மாதிரியான மிரட்டல் தகவல்கள் ஒன்றும் புதியதல்ல.  1980-ம் வருடம் என்று நினைக்கிறேன்.  சில கிறிஸ்த்துவ பிரச்சாரர்கள் இதே போன்ற சிறு துண்டு சீட்டை கொடுத்து தொன்னுறாம் வருடத்தில் உலகம் அழிந்துவிடும் என்றும், அதற்குள்  இயேசுவை ஏற்றக்கொண்டால்  தப்பித்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.  அப்படி சொல்லி துண்டு பிரசுரம் கொடுத்த பிரசங்கியை 1992-ம் வருடம் நேரில் பார்க்க நேரிட்டது. அவரிடம் நீங்கள் சொன்னப்படி உலகம் அழிந்து விட்டதா?  அல்லது இயேசுவை நம்பியவர்கள் மட்டும் காப்பாற்ற பட்டு விட்டார்களா?  அப்படியென்றால் நான் இயேசுவை ஏற்ற கொள்வில்லையே?  நான் மட்டும் எப்படி பிழைத்து கொண்டு விட்டேன் என்று கிண்டலாக கேட்டேன்.  இப்படி நான் கேட்டதும் மனிதன் கோபித்து கொள்வார், சங்கடப்படுவார் என்று எல்லாம் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் பரிசாக கிடைத்தது.


     நான் அப்படி கேட்டதற்கு அவர் கொஞ்சகூட வருத்தப்படவில்லை.  உலக மக்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிறிது கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்.  இன்னும் பலர் மனம் திருந்த வேண்டும்.  விவிலியத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டாயிரமாண்டு பிறக்கின்ற வரையில் காத்திருப்பார்.  என்று நம்பிக்கையோடு பதில் தந்தார். 

    ஒரு மனிதனுக்கு மரணபயத்தை ஏற்படுத்தினால் மரணத்திற்கு பின்னால் கிடைக்கும் தண்டனைகளை பற்றிய பீதியை ஏற்படுத்தினால் அவனை அடிபணிய வைக்கலாம் என்பது ஒரு வகையான மனோ தத்துவம்.  இத்தகைய மனோ தத்துவங்களின் பல பிரிவுகளை நன்றாக கற்று தேர்ந்தவர்கள் கிறிஸ்த்துவ பாதிரிமார்கள்.  அதனால் அவர்கள் அப்படி தான் பேசுவார்கள்.  இதே கேள்வியே இரண்டாயிரம் பிறந்த பிறகு யாரிடமாவது கேட்க வேண்டுமென்று காத்திருக்கிறேன்.  இதுவரை உருப்படியான எந்த பிரசங்கியையும் சந்திக்கவில்லை.  என்பதினால் அந்த கேள்வி அப்படியே பாக்கியாக நிற்கிறது


     ஒருவேளை நான் கேட்டிருந்தால் கூட இரண்டாயிரத்திற்கு பிறகு தானே சுனாமி வந்தது.  மிக வேகமான புயல் காற்றுயெல்லாம் வீசுகிறது.  பல நிலநடுக்கங்கள் உலகை அச்சுறுத்துகிறது.  இவையெல்லாம் உலகம் அழிவதற்கு கடவுள் காட்டும் அடையாளங்கள்.  இப்போதாவது மனம் திருந்தி இயேசுவை ஏற்றுக் கொண்டால் தப்பிக்கலாம் என்று சமாதான பிரச்சாரம் செய்வார்களே அல்லாமல் தவறை ஒத்து கொள்ள மாட்டார்கள்.

    அவர்கள் பிரச்சாரங்களை கேட்கும் போது அடிப்படையே இல்லாமல் ஒரு பொய் பிரச்சாரத்தை துணிந்து செய்ய முடியுமா?  விவரம் தெரிந்த யாராவது தட்டி கேட்க மாட்டார்களா?  ஒரு வேளை அவர்கள் பிரச்சாரத்தில் சிறிதளவேனும் உண்மையிருக்கலாமோ?  என்று நமக்கு எண்ணம் வருகிறது.  அவர்களின் வாதத்திற்கு என்ன ஆதாரம் என்று பைபிளின் புதிய, பழைய ஏற்பாடுகளை புரட்டி புரட்டி பார்த்தேன்.  உலக முடிவு நாளை பற்றி மறைமுகமாகவோ,  நேர்முகமாகவோ ஒரு வார்த்ததையை கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பைபிளில் தான் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்,  பைபிளை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்யும் பல நடுநிலையான கிறித்துவ அறிஞர்கள் அதை பற்றி எதாவது சொல்கிறார்களா என்றும் விசாரித்து பார்த்தேன்.  அவர்கள் அனைவருமே ஒரே குரலில் உலகத்தின் இறுதி கட்டம் வரும் போது தேவகுமாரன் பூமிக்கு வருவார்,  மனிதர்களின் பாவ,  புண்ணியங்களுக்கு ஏற்ப பலாபலன்களை கொடுப்பார்,  அதுமட்டும் தான் நிச்சயம், மற்றபடி அவர் இந்த வருடத்தில் இந்த தேதியில் வருவார் என்பது பற்றி பைபிளில் எந்த குறிப்பும் இல்லையொன்று சொன்னார்கள்.


     சரி, கிறிஸ்த்துவ வேதத்தில் இல்லை ஒருவேளை, இஸ்லாமியர்களின் வேத நூலான கூர்-ஆனில் இருக்கலாமோ என்று சந்தேகம் எனக்கு ஏற்பட கூர்-ஆனுக்குள் புகுந்து தேடியும் பார்த்தேன்.  அங்கே இறுதி தீர்ப்பு நாள் எப்போது வருமென்று கடவுள் ரகசியமாக வைத்திருக்கிறார் என்ற தகவல் தான் கிடைத்ததே தவிர வேறு எதுவும் அதை பற்றி கிடைக்கவில்லை.

    இந்த நேரத்தில் மலையாள மொழியில் ஒளிபரப்படும் கிறிஸ்த்துவ தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியை காண நேரிட்டது.  அதில் மாயன் கால நாகரீக மக்கள் ஒரியன்  காலண்டர் என்ற ஒன்றை வைத்திருப்பதாகவும் அதில் 2012, டிசம்பர் மாதம் வரையில் தான் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,  எனவே அந்த நாள் தான் பூமியின் கடைசி நாள் இயேசு பூமிக்கு வரும் நாள் என்று சொல்லப்பட்டது.  அதை கேட்டவுடன் உண்மையிலேயே மாயன் நாள் காட்டி அப்படி எதாவது சொல்கிறதா?  அப்படி சொல்லப்பட்டால்,  எந்த ஆதாரத்தை வைத்து சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆராய ஆசை ஏற்பட்டது.

    மாயன் நாகரீகத்தை பற்றி சிறிய வயதிலிருந்தே நம்மில் பலருக்கு அறிமுகம் உண்டு, பாரசீக நாகரீகம்,  கிரேக்க நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீக வரலாறு வரிசையில் மாயன் நாகரீகத்தையும் கேள்விபட்டிருக்கிறோம்.  மாயன் கால நாகரீக மக்கள் கணிதம்,  வானியல் ஆராய்ச்சி, போன்ற துறைகளில் மகா மேதாவிகளாக இருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம்.  அது மட்டுமல்ல டேரி மில்க் சாக்லேட், பைய்ஸ்டார் சாக்லேட், போன்றவற்றிக்கெல்லாம் அடிப்படை தொழில் நூட்பம் தந்தது.  அதாவது உலகின் முதல் முறையாக சாக்லேட் தயாரித்தது மயான் மக்கள் என்பதை அறிந்து வியப்பும் அடைந்திருக்கிறோம்.


     இத்தகைய மயான் மக்கள் உலகில் எந்த பகுதியில் வாழ்ந்தார்கள் என்றால் அதிசயப்பட வேண்டாம்.  அமெக்காவில் தான் வாழ்ந்தார்கள் முகத்தில் பல வண்ண கோடு போட்டு தலையில் பறவையின் இறகுகளானால் தொப்பி அணிந்து மிருக தோல்களை ஆடையாக அணிந்து அமெக்காவின் பழங்குடி மக்கள் என காட்டப்படுவார்களே செவ்விந்தியர்கள் அவர்கள் தான் மாயர்கள்,

    அவர்களின் நாகரீகம் தான் மயான் நாகரீகம் அவர்கள் காலத்தை கி.மு.  2600-ல் தொடங்கியது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 2600 எல்லாம் இல்லை,  மாயர்களின் காலம் அதற்கு முன்பே துவங்குகிறது என்று ஒரு சாரர் கருதுகிறார்க்ள.  அப்படி சொல்பவர்கள் தங்களுக்கு ஆதாரமாக போப்பல் வூ என்ற மாயர்களின் இதிகாச புத்தகத்தை காட்டுகிறார்கள்.  எது எப்படியோ மாயர்களின் காலம் என்பது இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை.  இப்போது பல அரசியல் காரணங்களால் மாயர்கள் வாழ்ந்த அமெரிக்க பகுதி மெக்சிகோ,  கௌத மாலா,  பெலிஸ், ஹோண்டுராஸ், எல் சார் வாடார், என்று தனிதனியாக பிரிந்து கிடக்கிறது.

    விண்வெளியில் பால்வழி என்ற ஒரு பகுதியியை  நாம் அறிவோம்.  இந்த பால்வழி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது ரேடார் கருவிகள் உருவான பிறகு அதாவது 1945-ல் பிறகு தான்.  ஆனால் மாயர்கள் 5000-வருடத்திற்கு முன்பே பால்வழி மண்டலத்தை நன்கு அறிந்து அதை பற்றிய விவரங்களை குறித்து வைத்து இருக்கிறார்கள்.  


   மேலும் 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரியன் நெபுல்லா என்ற விண்வெளி கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  1880-ல் தான் இந்த விண்மீன்கள் தொகுப்பு புகைபடமாக எடுக்கப்பட்டது. ஆனால் பல ஆயிரம் வயதுடைய மாயன் ஒவியங்களிளும் சுவர் சிற்பங்களிளும் இந்த விண்வெளி கூட்டத்தை துல்லியமாக வரைந்து செதுக்கி வைத்துள்ளனர்.

   பண்டைய இந்திய வானியல் ஆய்வாளர்களும் இதற்கு பிரஜாபதி என பெயரிட்டு அழைத்துள்ளனர். ஆனால் நவீன விஞ்ஞானம் பல கருவிகளை வைத்து கண்டுபிடித்த ஒரியன் நெபுலாவை மாயர்கள் எந்த கருவிகளும் இல்லாமல் கண்டறிந்து உள்ளது விடை கிடைக்காத அதிசயமாக இன்று நிற்கிறது.

    மெக்சிகோவில் கி.மு.  ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமிடு ஒன்று உள்ளது.  அது சீசென் யீட் என்ற நகரில் இன்றும் உள்ளது.  இதிலுள்ள அதிசயம் என்னவென்றால் இந்த பிரமீட்டின் நிழல் இரண்டு சிறகுகள் முளைத்த பாம்புபோல வருடம் தோறும் மார்ச் 21-ம் தேதியும்,  செப்டம்பர் 23-ம் தேதியும் பூமியின் மீது விழுகிறது.  இந்த அதிசயத்தை காண உலகெங்கும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் அந்த நகரத்தில் குவிகிறார்கள்.


     பிரமீட்டின் நிழல் சிறகு முறைத்த பாம்பாக விழும்படி மாயர்கள் கட்டிடத்தை ஏன் உருவாக்க வேண்டுமென்று கேட்டால் ஆதிகால மாயன் மதத்தின் கடவுளான கேட்ஸல்கோயாட்டல் என்பவரின் உருவம் சிறகு உள்ள பாம்பு வடிவம் தான்.  இதில் என்ன அதிசயம்  இருக்கிறது.  வேண்டு மென்றால் மாயர்களின் கட்டிட கலையின் திறமையை பாராட்டலாம் என்று நாம் நினைக்கலாம்.  ஆனால் உண்மை இதையும் தாண்டிய அதிசயமாகும்,  அதாவது ஒர வருடத்தில் பகலும் இரவும் சமமாக இருக்கும் நாட்கள் மார்ச் 21-ம் செம்டம்பர் 23-ம்  தேதியும் தான் மாயர்கள் காலத்தை அளப்பதில் எத்தனை திறமைசாலிகளாக இருந்தால்,  இது சாத்தியம்,

சூரியன் இயக்கத்தை மிக நூணுக்கமாக ஆராய்ந்து நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே சம நோக்கு நாளையும்,  நிழல் உருவம் வரும்படியான தோற்றத்தையும் உருவாக்க முடியும்.  சூரியனுடைய இயக்கத்தை மட்டுமல்ல சந்திரனின் சலனத்தையும் அவர்கள் நன்கு அறிந்து நாட்களை பற்றிய கணிதத்தை ஏற்படுத்தி இன்று நாம் உபயோகப்படுத்துகின்ற நாட்காட்டி போன்ற காலண்டரையும் உருவாக்கி இருக்கிறார்கள்.  அந்த காலண்டரின் பெயர்தான் ஒரியன் காலண்டர்.

    ஒரியன் காலண்டர் கி.மு. 550-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம்  என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நமது இப்போதைய நாட்காட்டிகளை விட ஒரியன் காலண்டர் மிகவும் வித்தியாசமானது அவர்களின் கணக்குப்படி இப்போது போலவே அப்போதும் வருடத்திற்கு 365- நாட்கள் தான்.  ஆனால் மாதங்கள் பதினெட்டு, ஒவ்வொரு மாதமும் இருபது நாட்களை கொண்டதாகும்.  இந்த காலண்டருக்கு ஹாப் என்று பெயர்.  

     இந்த மாதத்தின் நாட்களை கூட்டினால் 360 நாட்கள் தான் வரும். மீதமுள்ள ஐந்து நாட்களை அதிஸ்ட்டமில்லாத நாட்கள் என்று மாயர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.  மேலும் இந்த ஹாப் காலண்டர் சாதாரணமக்கள் உபயோகபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான். 

 தெய்வ காரியங்களுக்கு என்றும் வானிநிலை ஆய்வாளர்களுக்கு என்றும் தனியாக இஸல்கின் என்றொரு காலண்டர் உண்டு,  இதன்படி இருபது நாட்கள் கொண்ட ஒரு மாதமும், பதிமூன்று மாதங்கள் கொண்ட ஒரு வருடம்,  அதாவது இருநூற்றி அறுபது நாட்கள் கொண்ட ஒரு வருடம் வரும், மாயர்களின் கணக்குப்படி ஹாப்,  இஸ்லால்கின் ஆகிய ஆண்டுகள் 52 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையும், 

  அந்த இணைப்பு ஏற்படும் வருடத்தல் உலகில் மாபெரு மாற்றங்கள் ஏற்படும் என மாயர்கள் சொல்கிறார்கள் இதுவரை உலகில் ஏற்பட்ட பெரிய யுத்தங்கள், இயற்கை பேரழிவுகள்,  மாபெரும் சாதனைகள்,  முன்னேற்றங்கள் அனைத்துமே இத்தகைய வருட சந்ததியில் தான் நடந்திருப்பதாக பலர் சொல்கிறார்கள்.  இந்த இஸல்கின் காலண்டர்தான் 2012-ம் வருடம் டிசம்பர் மாதம் 23-ம் தேதியோடு முடிவடைகிறது.  அந்த தேதியில் உலகம் அழிந்து புதிய உலகம் பிறக்கும் என்று மாயன் தீர்க்கதரிசனம் சொல்கிறது.


     இந்த மாயன் தீர்க்க தரிசனம் கண்டிப்பாக பலிக்குமா?  இதுவரை மாயன் தீர்க்க தரிசனத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எதாவது உண்டா?  என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்கு அடுக்கடுக்கான பதில்களை தீர்க்க தரிசனத்தின் ஆதாரவாளர்கள் தருகிறார்கள்.  அந்த ஆதாரங்கள் இயேசுநாதர் பிறப்பதற்கு முந்தைய காலத்திலிருந்து,  ஒபாமா காலம் வரையில் நீளுகிறது. அவைகளில் ஒரு சிலவற்றை பார்த்தாலே நெஞ்சை அடைத்து கொண்டுவரும்.

    மாயர்களின் அழிவு யாரால் ஏற்படும் அந்த இனம் அழிந்த பிறகு அவர்கள் வாழ்ந்த பகுதியான அமெரிக்கா எப்படி வளரும்?  உலகத்தை எப்படி ஆட்டிவிக்கும்?  அமெரிக்க,  ரஷ்ய பனிப்போர், செங்கிஸ்கான், நெப்போலியன்,  ஹிட்லர், ஸ்டாலின் மா.சே.தூங், மகாத்மா காந்தி போன்றோர்களை பற்றியும் மிக துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது. 

   உலகம் அழிய போகும் காலத்தில் மனிதர்களின் மனோநிலை எப்படி மாறி அமைந்திருக்கும்?  இயற்கை சூழல் எப்படி மாறும்?  அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை எவ்வாறு சுருக்கும்.   என்ற விவரங்கள் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் ஒரளவு நடந்துள்ளன.  அவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது ஒரியன் தீர்க்கதரிசனம் நடந்துவிடுமோ என்ற அச்சம் நமக்கு இயற்கையாக ஏற்படுகிறது.  ஆனால் இந்த தீர்க்க தரிசனத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது.


     அது என்ன சிக்கல் என்று சிறிது நேரம் கழித்து பார்ப்போம்.  அதற்கு முன்பாக தீர்க்கதரிசனங்கள் என்று சொல்லப்படுபவைகள் என்ன? அது மனிதர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.  தீர்க்க தரிசனம் என்ற வார்த்தைக்கு நேரிடையான தமிழ் பொருள் உறுதியான பார்வை என்பதாகும் இந்த சக்தி  கடந்த காலம் நிகழ்காலம்,  எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணர்ந்தவர்களுக்கே ஏற்படும் என்று யோக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

    யோக சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் பதஞ்சலி முனிவர் எழுதிய பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூல் எந்தயோகி தனது மனதை நினைத்த மாத்திரத்தில் புறப்பொருளிலிருந்து விடுவித்து கொள்கிறானோ அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் பார்க்கும் தகுதி பெற்றிருக்கிறானோ அவனே முக்காலத்தையும் உணர முடியும் என்று கூறி அதற்கான மனபயிற்சியும் உடல் பயிற்சியையும் விரிவாக கூறி செல்கிறது. 

   அதன் படி நடந்தால் நிச்சயம் சாதாரண மனிதன் கூட யோகி ஆகிவிடலாம்.  என்பது நடைமுறை உண்மை.  ஆனால் இப்படி பயிற்சி செய்து முக்காலத்தை அறிவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட பிறக்கும் போதே இந்த தகுதியோடு பிறப்பவர்களும் இருக்கிறார்கள்.  அத்தகையவர்களின் பட்டியலை எடுத்து பார்த்தால்  கார்கி,  மைத்ரேயி கௌதம புத்தர்,  இயேசுநாதர் என்று தொடங்கி சமீபத்தில் முக்தி பெற்ற காஞ்சி மகாபெரியவர் வரை சொல்லலாம்.  ஆனால் இவர்களில் உலகத்தில் நடக்க போகின்றவைகளை சொன்வர்கள் மிகவும் குறைவு, அப்படி குறைவான தீர்க்க தரிசிகளில் நாஸ்டர்டாமஸ் ஒருவர்  இவர் ஜோதிடரோ,  குறி சொல்பவரோ அல்ல,  பிறப்பிலிருந்தே அதீத ஆற்றல் பெற்ற அதிசய மனிதர். 


      நாஸ்டர்டாமஸ் ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் 1984-ம் வருடம் அக்டோம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற போகும் ஒரு சோக சம்பவத்தை முன்கூட்டியே சொல்கிறார் உலகத்தின் தென்பகுதியில் மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பத்தில் இரும்பு பெண்மணி இரண்டாம் முறையாக சிம்மாசனம் ஏறுவார்.  அந்த நூற்றாண்டு முடிய பதினாறு வருடங்கள் பாக்கி இருக்கும் போது தன் பாதுகாவல்களாயே கொல்லப்படுவார். என்று சொன்னார்.  அதாவது இந்தியாவில் மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு மிகபெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய திருமதி,  இந்திரகாந்தி அம்மையாரின் படுகொலையை தான் இப்படி குறிப்பிடுகிறார். 

    பிரெஞ் புரட்சிக்கு பிறகு பிரான்ஸ் நாட்டின் அரசனாக நெப்போலியன் வருவதையும் அவன் ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொள்வதையும்,  கடைசி காலத்தல் ஹெலினா தீவில் சிறைப்பட்டு பைத்தியமாகி மாண்டு போவதையும் நெப்போலியன் தோன்றுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்டர்டாமஸ் சொல்லி வைத்துள்ளார். 

   இது மட்டுமல்ல ஹிட்லரின் தலைமையில் ஜெர்மன் வீறுகொண்டு எழுவதையும் வல்லரசுகளுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்வதையும் பின்னர் ரஷ்யாவில் மாட்டிக்கொண்டு படுதோல்வியடைந்து கண்ணுக்கு தெரியாமலேயே மாண்டு போவதையும் ஹிட்லரின் காலத்திற்கு பிறகு ஜெர்மன் நாடு கிழக்கு மேற்கு என இரண்டாக பிளவு படுவதையும் நாஸ்டர்டாமஸ் முன்கூட்டியே சொல்லி வைத்துள்ளார்.


    ரஷ்யாவில் ஜார்மன்னனின் ஆட்சி வீழ்ந்து பொதுவுடமை அரசு மலரும் என்பதை கூறிய நாஸ்டர்டாமஸ் அந்த பொதுவுடமை அரசு முன் மண்டையில் தேள் போன்ற மச்சம் உடைய தலைவரால் அதிகாரத்தை கைவிடும் என்று கூறினார். சோவியத் யூனியனில் முன்னந்தலையில் மச்சம் கொண்ட தலைவர் மிகையில் கோப்பச்சேவ் ஆவார்.   இவர் தான் பொதுவுடமை அதிகாரத்ததை விலக்கி கொண்டு ரஷ்யாவில் ஜனநாயம் ஏற்பட வழி வகுத்தார் என்பதும் உலகில் பெரும் வல்லரசுகளுக்கிடையில் நடைபெற்று கொண்டிருந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.  என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

    உலகம் முழுவதும் நாஸ்டர்டாமஸ் போல ஒவ்வொரு காலகட்டத்திலும் பல தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள்.  அவர்களின் தீழ்க்கதரிசனமும் பல நேரங்களில் சரியாக இருந்திருக்கிறது.  1986-ல்  குஜராத் மாநிலத்தில் பாபுராம் பட்டேல் என்ற ஒரு அதிசய மனிதர் இருந்தார்.  அவர் இந்தியாவை பற்றி ஏராளமான தீர்க்க தரிசனங்களை சொல்லியிருப்பதாக கேள்வி.  அதில் மிக முக்கியமானது இருபத்தியோரம் நூற்றாண்டின் துவக்க பகுதியில் அயல்நாட்டு பெண்மணி ஒருவர் இந்தியாவின்  அரசாங்கத்தை திரைமறைவிலிருந்து இயக்குவார் என்றும், அவருக்கு பிறந்த வாரிசு கூட இந்தியாவின் தலைமை பதவிக்கு வரும் என்றும் சொல்லி இருக்கிறராம். இந்த வார்த்தையின் சாயலே சோனியா காந்தியையும்,  ராகுல் காந்தியையும் சுட்டி காட்டுவதை உணரலாம்.


    நான் மிகவும் சிறியவனாக இருக்கும் போது எனது சொந்த கிராமத்தில் மிக வயதான பெண் பூசாரி ஒருவர் இருந்தார்  அவர் தனிப்பட்ட மனிதர்களுக்கு குறி சொல்லமாட்டார்.  திடிரென்று அவருக்கு வரும் ஆவேசத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகளை சொல்வார்.  அப்படிதான் ஒருமுறை கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது திடிரென ஆவேசம் வந்தவராய் நல்லதலை ஒன்று விழப்போகிறது.  நாடு கெடப்போகிறது என்று கூறிவண்ணம் மயங்கி விழுந்தார்.  அவர் அப்படி சொல்லிய ஒரு மாதத்திற்குள்ளேயே பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திடிரென காலமானார்.

    இப்படி ஏராளமான தீர்க்கதரிசிகளும், தீர்க்க தரிசனங்களும் உலகம் முழுவதும் உண்டு,  ஆனால் இவர்களிலிருந்து நாஸ்டர் டாமஸ் முற்றிலும் மாறுபட்டவர். அவர் எழுதி வைத்த தீர்க்க தரிசனங்கள் அனைத்துமே தெளிவானவைகள்.  மிக துல்லியமான கணக்கின் விடைபோல தெரியகூடியவைகள்.

 ஆனால் துரதிஸ்டவசமாக அவர் எழுதி வைத்துள்ள பாடல்களை சாதாரணமாக படித்து புரிந்து கொள்ள முடியாது. சம்பவம் நடந்த பிறகு அடடா இதை தான் அவர் அப்படி சொன்னாரா?  என்று துன்பப்படவைக்கும.  ஏன் அவர் தெரிந்த புரிந்த பாஷையில் தெரியாத வகையில் எழுதிவைத்துள்ளார் என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது ஆச்சர்யமான ஒரு உண்மை தெரியவருகிறது. 

    இந்த உலகத்தில் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வுகள் எல்லாமே கடவுள் என்ற மகாசக்தியின் எண்ணப்படி நடந்து வருகிறது. இதை இறைவனின் திரு உள்ளம்  என்று மெய்ஞானி கருதுகிறான், இயற்கையின் ஒழுங்குமுறையான  செயல்பாடு என்று விஞ்ஞானி நம்புகிறான். இரண்டிலும் கருதுகோள்கள் வேறுவேறு என்றாலும் அடிப்படை உண்மை என்னவோ ஒன்று தான்.  


     நம்மை சுற்றி நடைபெறுகின்ற நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தாலே அடுத்து நடக்கப்போவதை நான் கூட கணித்துவிடலாம்.  ஆனால் அப்படி கணித்ததை எல்லாம் வெளிபடையாக சொல்லி விட்டால் சகஜமான உலக இயக்கத்திற்கு குந்தகம் ஏற்பட்டுவிடும்.  அதே நேரம் வீணான மன சஞ்சலங்களும் ஏற்படலாம்.  தவிர்க்கவே முடியாத ஒரு விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதை தவிர்த்து விடலாம் என்று நினைப்பது அறிவீனம்.  ஒரு வழியில் இல்லை என்றாலும் இன்னொரு வழியில் அது நடந்தேதீரும். என்பதை அனுபவபூர்வமாக அவர் உணர்ந்ததினால் தான் மறைபொருளாக சொல்லி சென்றிருக்கிறார்.  இனி அவரின் துல்லியமான தீர்க்கதரிசனம் ஒன்றை பார்ப்போம்.

    உலகில் அமெரிக்கா என்ற ஒரு கண்டத்தை கண்டுபிடிக்காத காலத்தில் நாஸ்டர்டாமஸ் சுகந்திரமாக வாழ விரும்பிய சிலர் தனியாக ஒரு நாட்டை உண்டாக்குவர்கள். அது உலகின் முதல்தர பணக்கார நாடாக திகழும் என்று கூறினார்.  அவர் குறிப்பிட்டது அமெக்காவை தான் என்பது சொல்லாமலேயே விளங்கும்.  மேலும் அந்த நாட்டில் இருபத்தியோரம் நூற்றாண்டின் துவக்க காலகட்டத்திலேயே நாற்பத்தி ஐந்து டிகிரி கோணத்தில் வானத்தில் தீப்பிழம்புகள் தோன்றும்.  தீ நகரத்தியே ஆக்கிரமிக்கும்,  பயங்கரவாதத்தின் பேரரசன் வருவான், அவன் எதனிடமும் இரக்கம் காட்டமாட்டான்.  என்று சொல்வதோடு இல்லாமல்,  வானில் இரண்டு இரும்பு பறவைகள் போதும் புகையும் நெருப்பும் புது நகரத்தையே மூடும் என்கிறார்.


    இந்த தீர்க்க தரிசனத்தை படித்த பலர் பூவியின் அட்சரேகை நாற்பத்தி ஐந்தாவது டிகிரியில் நியூயார்க் நகரம் இருக்கிறது.  இதைத் தான் அவர் புது நகரம் என்று அழைக்கிறார் எனவே வானத்திலிருந்து இரண்டு விண்கற்கள் வந்து அந்நகரை தாக்க கூடும் என்று கருத்து தெரிவித்தார்கள்.

 ஆனால் அவர்கள் யார் கண்ணிலும் பயங்கரவாதத்தின் பேரரசன் என்ற வாசகம் தட்டுபடவில்லை போல்தெரிகிறது.  நாஸ்டர்டாமஸ் அந்த பயங்கரவாத அரசன் யார் என்பதை பற்றியும் அவனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றியும் சிறிய விளக்கங்கள் கொடுத்துள்ளார். 

   மாபெரும் அராபிய நாட்டிலிருந்து வருவான். வலிமை கொண்ட தலைவனாக உருவெடுப்பான் அவனினும் கொடியவன் அதற்கு முன் யாரும் உலகில் இருந்திருக்க மாட்டார்கள். மானிட வர்க்கமே அவனை கண்டு அஞ்சும் அவன் நீலதலைபாகை அணிந்திருப்பான், அவனால் உருவாகும் போர் இருபத்தியேழு ஆண்டுகள் தொடர்ந்து நடக்கும் என்றும் சொல்கிறார்.


    ஆக நாஸ்டர்டாமஸ் சொல்லும் பயங்கரவாதத்தின் பேரரசன் ஒசாமா பின்லேடனாக இருக்கலாம்.  அல்லது அவனது கருத்துக்களால் உருவாகும் புதிய கொடியவானாகவும் இருக்கலாம்.  ஆனால் இரண்டு இரும்பு பறவை என்று அவர் குறிப்பிட்டது உலகவர்த்தக மையத்தையும், பெண்டகனையும் தாக்கிய விமானம் என்ற இரும்பு பறவைகள் என்பது மட்டும் என்பது சர்வ நிச்சயமான உண்மை.


    சரி  இவர் இத்தனை தீர்க்க தரிசனங்கள் சொல்லியிருக்கிறார்.  2012-ல் உலகம் அழியும் என்று சொல்லியிருக்கிறாரா?  நிச்சயம் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி சொல்லியிருந்தால் இரண்டாயிரத்தில் துவங்கும் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் இருபத்தியேழு வருடங்கள் தொடர்ந்து நடக்கும் என்று எப்படி சொல்வார்.  பன்னிரெண்டு வருடங்கள் தான் நடக்கும் என்று சொல்லிருக்கலாமே எனவே ஒரியன் காலண்டர் விஷயம் சரியான முடிவு அல்ல என்ற முடிவுக்கு தான் வரவேண்டியுள்ளது.

    அந்த முடிவை நாம் எடுப்பதற்கு முக்கிய காரணம் உண்டு,  புகழ் பெற்றிருந்த மாயன் நாகரீகம் கிறிஸ்த்துவ மத வெறியர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு சில எச்சசொச்சங்கள் தான் மீதம் கிடைக்கிறது.  ஆதிகால ஐரோப்பாவிலும், அரேபியாவிலும் ஒரு மூடதனம் மிக கொடுரமாக ஆட்சி செய்து வந்தது.  அதாவது பைபிளில் சொல்லப்படாத கருத்துக்களோ அல்லது  கூர்-ஆனில் இல்லாத கருத்துக்களோ எந்த தனிமனிதனோ அல்லது புத்தகமோ அல்லது நிறுவனமோ சொன்னால் அதை சாத்தானின் வேலை என்று கருதி முற்றிலும் அழித்துவிடுவார்கள். 

   அவர்களால் அழிக்கப்பட்ட அறிவு கருவூலங்கள் ஏராளம்.  இதனால் உலகத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் இழப்புகளும் ஏராளும் என்று அடித்து சொல்லலாம்.  கி.பி. 1517-ம் ஆண்டு நாடு பிடிக்கும் ஆசையில் மாயர்கள் மீது போர் தொடுத்த  ஸ்பெயின் நாட்டு கிறிஸ்த்துவர்கள் 90% மாயன் மக்களையும்,  95%  மாயன் கலாச்சார அறிவியல் சின்னங்களையும் பல அரிய நூல்களையும் அழித்தே விட்டார்கள் அப்படி அழிக்கப்பட்ட பல பொருட்களின் ஒரியன் காலெண்டன் சில பகுதிகளும் அடங்கியிருக்கலாம்.  சென்ற வருடத்தில் என்னை சந்திக்க வந்த எல்சால்வடார் நாட்டை சேர்ந்த திருமதி,  ஒக்ளெடியா என்ற அம்மையார் மாயன் நாட்காட்டியில் பல பகுதிகள் இன்று கிடைப்பதில்லை என்றும் தற்போது கிடைத்திருப்பது முழுமையானதாக இருக்க வாய்ப்பில்லையென்றும் சொன்னார்.  பல வரலாற்று ஆதாரங்களையும் புதைபொருள் ஆய்வாளர்களின் கூற்றுகளையும் கைதேர்ந்த சோதிடர்களின் கருத்துக்களையும் ஒருங்கினைத்து பார்க்கும் போது அந்த அம்மையார் சொன்னப்படி பாதி காலண்டரை வைத்துகொண்டு கணக்கு போடுகிறோம் என்று நினைக்கிறேன்.

    கட்டுரையின் ஆரம்பத்தில் கிறிஸ்த்துவ, இஸ்லாமிய வேதங்கள் உலக அழிவு நாளை துல்லியமாக குறிப்பிடவில்லை என்று பார்த்தோம். இந்து மதத்தினுடைய ஆதார நூல்கள் என்ன சொல்கின்றன என்பதையும் பார்த்தால் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  இந்துமத கால கணக்குப்படி நான்கு யுகங்கள் உண்டு என்று நமக்கு தெரியும்.  இதில் கிரேதா யுகத்திற்கு 17,28,000 ஆண்டுகள் உண்டு,  திரேதாயுகத்திற்கு 12,95,000 ஆண்டுகள் உண்டு,  துவாபரயுகத்திற்கு 8,64,000 ஆண்டுகள் உண்டு, தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு மொத்த வயது 4,32,000 ஆண்டுகள் ஆகும்.  கலியுகம் பிறந்து இப்போது 5,110 வருஷம் தான் ஆகிறது.  இன்னும் 4,26,890 வருடங்கள் முடிந்த பிறகு தான் கலியுகத்தின் ஆயுள் முடியும்.  அப்போது தான் பிரம்மாவிற்கு பகல்முடிகிறது  இரவு வரும். அதாவது பிரம்மாவின் இரவு என்பது உலகத்தின் அழிவு அல்லது செயல்படாத நிலை என்பதாகும்.  அதனால் அதுவரை இயற்கை நியதிப்படி உலகம் அழியாது,  நாமாக அணுகுண்டை போட்டு கொண்டால் தான் உண்டு அதற்கு இயற்கையும்,  இறைவனும் பொறுப்பு ஏற்க முடியாது. 

Comments

Popular posts from this blog

என்னை கண்டுபிடித்தால் 10 கோடி பரிசு

   அ ன்புள்ள அம்மா, அப்பாவிற்கு உங்களால் செல்லக்குட்டி என்று அழைக்கப்படும் கரைந்து போன வெல்லகட்டி எழுதும் கடிதம், நீங்கள் நலமா? நம் வீட்டின் பின்னால் வளர்ந்து நிற்கும் வாழைமர மடலுக்குள் பதிங்கியிருக்கும் தேரைக்குட்டி நலமா? அந்த தேரைக்கு கூட உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு எந்த பாக்கியமும் இல்லை.       அம்மா அன்றொரு நாள் நம் வீட்டு மண் தொட்டியில் பூத்திருந்த ரோஜா பூவை நான் பறிக்க போன போது செடியில் இருந்து பூவை பறிக்காதே, அது பாவம் என்றாய் பூவும் செடியுமே பிரிவதை தாங்கமுடியாத உன்னால் உன் வயிற்றிக்குள் இருக்கும் கதகதப்பான மையிருட்டில் தொப்புள் கொடி சுவாசத்தில் கைமடக்கி, கால் மடக்கி இல்லாத சிந்தனையால் கண் சுருக்கி சுருண்டு கிடந்த நான் கருப்பையின் வாயிலை முட்டி மோதி உன் உதிரத்தை சிந்த வைத்து பூமியில் வந்து விழுந்த என்னை உன் மார்பு காம்பில் பசி மறந்து உலகையே மறந்து துயின்ற உன் குல கொழுந்தை எப்படி பிரிய மனது வந்தது.     உன் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தவுடன் நான் கை விர...

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

   நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது. நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod . இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.   www.titane.ca இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.   மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.  பின்பு .. மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும். ...

ALL RESULTS

Get an all school and university result with the official website's. Tamil Nadu SSLC Result Tamil Nadu HSC Result Polytechnic College Result TNPSC Departmental Exam Result TNPSC All Exam Results Annamalai University Results Anna University Results Madras University Regular Results Madras University DDE Results Madurai Kamaraj University Regular Results Madurai Kamaraj University DDE Results Tamil Nadu Open University Results Manonmaniam Sundaranar University Results IGNOU Results Thiruvalluvar University Results